அழியாப் புகழ் பெற்ற நாய்

துணிச்சலான சிறிய வேட்டை நாய் இனமான Smooth fox terrier mix இனத்தை சேர்ந்த ஒரு பெண் நாய் Moscow தெரு ஒன்றில் மெதுவாக ஓடித்திரிந்த வண்ணம் இருக்கின்றது.அங்கு மிகவேகமாக ஒரு வண்டி வந்து நிற்க அதிலிருந்து இறங்கிய சிலர் அந்த நாயை நோக்கி ஒரு பிஸ்கட்டை வீசுகின்றனர்.அதை சாப்பிட்ட அந்த பெண் நாய் இன்னொரு பிஸ்கட்டுக்காக அவர்களைப் பார்க்கின்றது.உடனே வந்தவர்கள் மற்றைய பிஸ்கட்டை தம் அருகில் இடுகின்றனர்.சூதுவாது தெரியாத அந்த பெண் நாய் அதனை உண்பதற்காக அவர்களை நோக்கி ஓடி வர வண்டியில் வந்தவர்களால் அந்த தெரு நாய் பிடித்துச் செல்லப்படுகின்றது.அந்த நாயைப் பிடித்துச் சென்றவர்கள் யார்?ஏன் தெருநாயை கொண்டு சென்றனர்...

விண்வெளி உடையுடன் லைக்கா(அரிதான படம்)

ஆம்,அந்த நாய்தான் உலக புகழ் பெற்ற நாய் லைக்கா.அது விஞ்ஞானி கொரொலெவ்வின் உதவி ஆட்களால் பிடித்து விண்வெளி பயிற்சி முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது.இது நடந்தது சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்.ரஷ்யா 1957 ஆம் வருடம் அக்டோபர் 4 ஆம் திகதி ஸ்புட்னிக்(ரஷ்ய மொழியில் "சக பயணி" என அர்த்தப்படும்.) என்ற உலகின் முதலாவது செயற்கை கோளை விண்ணுக்கு ஏவியது அமெரிக்காவின் வயிற்றெரிச்சலுக்கு காரணமாயிருந்தது.இந்த வயிற்றெரிச்சலை இன்னும் அதிகப்படுத்துவதாய் தயாரானது ஸ்புட்னிக்-2.ஸ்புட்னிக்-2 இல் ஓர் உயிருள்ள பிராணியை அனுப்ப ரஷ்ய விஞ்ஞானிகள் முடிவுசெய்தார்கள்.இதற்கு விஞ்ஞானி கொரோலெவ்வினால் தெரிவு செய்யப்பட்டது ஒரு பெண் நாய்.அதற்கு அவர் கூறிய காரணம் "பெண் நாய் பொது இடத்தில் நின்று கொண்டு காலைத்தூக்கிய வண்ணம் சிறுநீர் கழிக்காது."என்பதாகும்.


இவ்வாறு கொண்டு வரப்பட்ட லைக்காவுக்கு அவசர அவசரமாக பயிற்சி கொடுக்கப்பட்டது.இந்த விண்வெளி நாய்க்கு ஒரு சிறிய பெட்டியில் மிக நீண்ட நேரம் அசைவற்று இருக்க பழக்கப்பட்டது.இதற்கு 10- 15 நாட்கள் செலவழிக்கப்பட்டது.லைக்காவுக்கு விண்வெளி உடை அணிவித்து ஒருவழி பயண ஓடமான ஸ்புட்னிக்-2 இல் ஏற்றி 1957 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் திகதி விண்நோக்கி அனுப்பி வைக்கப்பட்டது.லைக்கா இருந்த விண்வெளிக் கலத்தின் பகுதி ஏவி அடுத்த கணமே மணிக்கு 18,000 மைல் வேகத்தை அடைந்தது.இதன்காரணமாக அப்பகுதியில் அழுத்தம் கூடியது.இதனால் லைக்காவின் நாடித் துடிப்பு சாதரண நிலையை விட முன்று மடங்கு அதிகரித்தது.இவ்வாறன ஐந்து தொடக்கம் ஏழு வரையான மணி நேர பறப்பில் உயிர் வாழ்வு கேள்விக்குறியே.இருப்பினும் லைக்கா நாய் ஆனது அதிகூடிய வெப்பம் மற்றும் அழுத்தம் என்பவற்றால் இறந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.ஸ்புட்னிக்-2 ஓடமானது 4 1/2 மாதத்தின் பின் (அதாவது 1958-04-14 இல்)பூமியில் எரிந்த வண்ணம் விழுந்தது.

0 பின்னூட்டங்கள்: